வட்டி மானியம் வழங்கும் காலம் ஒரு ஆண்டிற்கு நீட்டிப்பு: தொழில்துறையினர் மகிழ்ச்சி
திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு வட்டி மானியம் வழங்கும் காலம் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. திருப்பூர் பின்னலாடை தொழில் மூலம் அன்னிய செலாவணி அதிகளவு ஈட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்துறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு சில சலுகைகளை வழங்கி வருகிறது.
அதன்படி திருப்பூரில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வட்டி மானியமும், ஏற்றுமதியாளர்களுக்கு 3 சதவீதமும் வட்டி மானியம் மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணம் தொழில்துறையினருக்கு சிறிது செலவை குறைக்கவும், நிதி பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் வட்டி மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது. இதனால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஏ.இ.பி.சி. (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம்) அகில இந்திய தலைவர் சக்திவேலுக்கு இது தொடர்பாக தெரிவித்தனர். தொடர்ந்து ஏ.இ.பி.சி. சார்பில் மத்திய மந்திரி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு இந்த வட்டி மானியம் நிறுத்தப்பட்டால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு தற்போது வட்டி மானியம் வழங்கும் காலத்தை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டி உத்தரவிட்டுள்ளது. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சிடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் இந்த தொகை அவர்களுக்கு பெரிதும் உதவும். மேலும், ஏ.இ.பி.சி.யின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியால் பலரும் பாராட்டி வருகின் றனர்.
Related Tags :
Next Story