ஊரடங்கு தடை உத்தரவு நேரத்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வட மாநிலத்தவர்கள்


ஊரடங்கு தடை உத்தரவு நேரத்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வட மாநிலத்தவர்கள்
x
தினத்தந்தி 15 May 2020 3:45 AM IST (Updated: 15 May 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தடை உத்தரவு நேரத்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வட மாநிலத்தவர்கள் மீட்கப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர், 

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் 22-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் உள்ளது. அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால் பலரும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வட மாநிலத்தவர்கள் பலர் வேலை செய்து வந்தனர்.

ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து தவித்து வந்த அவர்கள் தங்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது. சொந்த ஊருக்கு செல்லும் வட மாநிலத்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நாலூர், சேலையனுர், ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் தங்கி இருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 40 பேர் லாரி மூலம் தங்கள் சொந்த ஊருக்கு அதிகாரிகளுக்கு தெரியாமல் சென்றனர்.

தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, தாசில்தார் ரமணி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை மடக்கி பிடித்தனர்.

உங்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து சட்டப்படி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்று தெரிவித்து அவர்களை அவர்களது இருப்பிடத்துக்கு அனுப்பி வைத்தனர். லாரியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Next Story