திருமழிசை காய்கறி சந்தையில் முக கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் - மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர் அருகே திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், சந்தையில் முக கவசம் அணியாமல் திரிந்தால் தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
திருவள்ளூர்,
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு காய்கறி சந்தையானது திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை துணைக்கோள் நகரப்பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சரக்கு வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதிகள், குடிநீர் வசதி, கழிவறைகள் வசதி, வாகனம் நிறுத்துமிடம், சூரிய சக்தியால் இயங்கும் மின் விளக்குகள், உயர் கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.
இந்நிலையில், முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கடந்த 9-ந் தேதியன்று திருமழிசைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பி.நாகராஜ் ஆகியோர் திருமழிசைக்கு சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
உறுதி செய்தனர்
இந்த ஆய்வின்போது, சந்தைக்கு வரும் அனைத்து வாகனங்களும் முழுமையாக கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவதையும், வியாபாரிகள் முக கவசம் அணிந்து பணிபுரிவதையும் உறுதி செய்தனர்.
மேலும் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் ஆகியவை வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறதா? சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? கழிவறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றதா? எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து, சந்தைக்கு வரும் வாகனங்கள் பொருட்களை இறக்கியதும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த தவறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சமூக இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்காத உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் அபராதங்கள் விதிக்கப்படும்.
அபராதம் விதிக்க முடிவு
இதுவரை திருமழிசை காய்கறி சந்தையில் முக கவசம் அணியாமல் திரிந்த 62 நபர்களிடம் இதுவரை ரூ.6,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் முக கவசம் அணியாமல் சந்தையில் சுற்றித்திரியும் வியாபாரிகளிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் எச்சரிக்கை தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, காஞ்சீபுரம் மண்டல டி.ஐ.ஜி.தேன்மொழி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், சிறப்பு வருவாய் அலுவலர்கள் தர்பகராஜ், கோவிந்தராஜ், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story