செங்குன்றம் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு


செங்குன்றம் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 15 May 2020 4:15 AM IST (Updated: 15 May 2020 3:49 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

செங்குன்றம், 

செங்குன்றத்தை அடுத்த ஆட்டத்தாங்கல் பாலமுருகன் நகர் எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த அஜித்குமார்(வயது 22), விக்ரம்(21), கர்ணா (22) ஆகிய 3 பேரும் நேற்று எடப்பாளையம் உப்பரபாளையம் சாலையில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அஜித்குமார் உள்பட 3 பேரையும் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர்கள் 3 பேரையும் வெட்டியவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் கைதானால்தான் 3 பேரையும் வெட்டியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

செங்குன்றத்தை அடுத்த சோழவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாலமுருகன் நகர், பால கணேஷ் நகர், நாகாத்தம்மன் நகர், அம்பேத்கர் நகர், எடப்பாளையம் ஆகியவை தற்போது ரவுடிகள் தஞ்சம் அடையும் பகுதிகளாக மாறி உள்ளன. ஊரடங்கு உத்தரவு காலத்திலும் இந்த பகுதியில் தற்போது மட்டும் 2 கொலைகளும், 2 கொலை முயற்சிகளும் நடைபெற்று உள்ளன.

அதன்படி கடந்த மாதம் முதல் வாரத்தில் சோலையம்மன் நகரைச் சேர்ந்த பெயிண்டர் பாலாஜி(24) என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையத்தைச் சேர்ந்த அப்பு என்ற சாயிஷா(26) 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தாங்கல் பாலமுருகன் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி மணி என்ற கஞ்சாமணி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதைதொடர்ந்து நேற்று இவர் கள் 3 பேரும் வெட்டப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story