கும்பகோணத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி சிறுவன் கைது


கும்பகோணத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி சிறுவன் கைது
x
தினத்தந்தி 15 May 2020 4:22 AM IST (Updated: 15 May 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு

கும்பகோணம் பாணாதுறை திருமஞ்சன வீதியில் ஒரு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இந்த பகுதியில் கோர்ட்டு மருத்துவமனை ஆகியவை உள்ளது. இதனால் அப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் நேற்று காலை அங்கு இருந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொள்ளை முயற்சி

தகவல் அறிந்த கும்ப கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து எந்திரத்தை உடைத்துள்ளார். ஆனால் எந்திரத்தில் பணம் இருந்த பகுதியை மட்டும் அவரால் உடைக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்துள்ளார்.

சிறுவன் கைது

இதையடுத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை பிடிப்பதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து கும்பகோணம் நால்ரோடு பகுதியில் மறைந்து இருந்த அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் முக்கிய பகுதியில் இயங்கி வந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த சிறுவனை 20 மணி நேரத்திற்குள் கைது செய்ததற்காக போலீசாரை கும்பகோணம் மக்கள் பாராட்டினர்.

Next Story