பொருளாதாரத்தை மீட்க சிறப்பு தொகுப்பு ரூ.20 லட்சம் கோடி எவ்வாறு திரட்டப்படும்? - சிவசேனா கேள்வி


பொருளாதாரத்தை மீட்க சிறப்பு தொகுப்பு ரூ.20 லட்சம் கோடி எவ்வாறு திரட்டப்படும்? - சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 15 May 2020 4:54 AM IST (Updated: 15 May 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நெருக்கடியால் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்புக்கு எவ்வாறு நிதி திரட்டப்படும் என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை, 

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பை அறிவித்தார். கொரோனா நெருக்கடி இந்தியா சுயசார்பு அடைவதற்கும், உலகத்தில் சிறந்த நாடாக ஆவதற்கும் வாய்ப்பளித்துள்ளது என்றும் கூறினார்.

இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு தொகுப்பு 130 கோடி இந்தியர்களையும் அடையும். இதன் மூலம் நாடு சுயசார்பு பெறும் என்று கூறுவது, இந்தியா தற்போது சுயசார்பு கொண்ட நாடாக இல்லையா? என்று தான் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. எந்தவொரு நாடும் நெருக்கடி மற்றும் போராட்டத்தில் கற்றுக்கொள்வதில் இருந்து தான் முன்னேறுகிறது. சுதந்திரத்திற்கு முன்பு, இந்தியாவில் ஒரு ஊசி கூட தயாரிக்கப்படவில்லை.

ஆனால் 60 ஆண்டுகளில் இந்தியா அறிவியல், தொழில்நுட்பம், வேளாண், வணிகம், பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் அணு அறிவியல் ஆகியவற்றில் சுயசார்பு பெற்றுள்ளது.

எவ்வாறு திரட்டப்படும்

பி.பி.இ. கருவிகளை தயாரிக்க உதவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் போன்ற ஒரு நிறுவனம் சுயசார்பு கொண்ட இந்தியாவின் ஒரு அங்கமாகும்.

பிரதமர் அறிவித்த சிறப்பு தொகுப்பின் ரூ.20 லட்சம் கோடி எவ்வாறு திரட்டப்படும்?. தொழில் அதிபர்கள், வர்த்தக மற்றும் வணிக துறைகள் முதலீடு செய்ய ஊக்கமளிக்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும். புதிய சுயசார்பு பாதையில், தொழில் அதிபர்கள் ஓடிப்போய் விடக்கூடாது. இதற்காக அமலாக்க இயக்குனரகம், சி.பி.ஐ. போன்ற விசாரணை முகமைகளை சிறிது காலம் ஊரடங்கில் வைக்க வேண்டும்.

4-ம் கட்ட ஊரடங்கு மற்றும் சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்ட போதிலும் அதன் தாக்கம் ஏன் பங்குச்சந்தையில் பிரதிபலிக்கவில்லை?முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். பிரதமரும், முதல்-மந்திரிகளும் அவர்களுக்கு நம்பிக்கை மற்றும் ஆதரவு அளிக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி டிஜிட்டல் இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்திருக்கவில்லை என்றால், இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி நேரத்தில் பிரதமர், முதல்-மந்திரிகள் மற்றும் அதிகாரிகளின் வீடியோ கான்பரன்சிங் கூட்டங்கள் நடந்து இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story