தங்கச்சுரங்கத்தில் 1,000 அடி ஆழத்தில் இறங்கி திருட முயற்சி; 3 பேர் மூச்சுத்திணறி சாவு - மேலும் 2 பேர் உயிருடன் மீட்பு; போலீஸ் விசாரணை
தங்கச்சுரங்கத்தில் 1,000 அடி ஆழத்தில் இறங்கி தங்கம் திருட முயன்ற 3 பேர், ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோலார் தங்கவயல்,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தங்கம் உற்பத்தியில் சிறந்து விளங்கியது. இந்த தங்கச்சுரங்கத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். தற்போது அந்த தங்கச்சுரங்கத்தை மத்திய அரசு மூடி உள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கச்சுரங்கம் மூடியே கிடக்கிறது. தங்கச்சுரங்கத்தில் தங்க வளம் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் மத்திய அரசு தங்கச்சுரங்கத்தை திறக்க அனுமதி மறுத்து வருகிறது.
தங்கவயலில் பல்வேறு பகுதிகளில் 25-க்கும் அதிகமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. இந்த தங்கச்சுரங்கத்துக்குள் இறங்கி தங்கம் திருடுவதை மர்மநபர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் தங்கச்சுரங்க பாதுகாவலர்கள் குடியிருப்பு பகுதியில் பராமரிப்பு பணியில் மட்டும் ஈடுபடுகிறார்கள். தங்கச்சுரங்க பகுதியில் காவலுக்கு நிற்பதில்லை. தங்கம் திருடுவதை தடுக்கவும் முறையான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நந்திதுர்கம் மில் பகுதியில் தங்கச்சுரங்கத்தில் காவலர்கள் கண்எதிரிலேயே மர்மநபர்கள் சுரங்கத்துக்குள் புகுந்து தங்கம் திருடி சென்றனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
தங்கம் திருட முயற்சி
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் அன்காக்ஸ் அருகே மைசூரு மைனிங் பகுதியில் உள்ள சுரங்கத்தில் இறங்கி 6 மர்மநபர்கள் தங்கம் திருட திட்டமிட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் தங்கச்சுரங்கத்துக்குள் சுமார் 1,000 அடியில் இறங்கி தங்கத்தை திருட முயன்றனர். ஆனால், தங்கம் திருட சுரங்கத்திற்குள் இறங்கியவர்கள் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் மேலே இருந்த ஒருவர், எவ்வளவு சத்தம் கொடுத்தும் சுரங்கத்தில் இருந்தவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் இறந்திருக்கலாம் என கருதிய அவர், உள்ளே இறங்கியவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், மாரிகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதற்குள் அங்கிருந்தவர் தப்பியோடிவிட்டார். பின்னர், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
3 பேர் சாவு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் மற்றும் பெங்களூரு கிழக்கு தலைமை தீயணைப்பு படை அதிகாரி குருலிங்கய்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டனர். முதலில், உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன என்பது போலீசாருக்கு தெரியவில்லை. இதனால், தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தங்கச்சுரங்கத்திற்குள் இறங்கினார்கள். அப்போது சுமார் 1,000 அடி ஆழம் கொண்ட தங்கச்சுரங்கத்திற்குள் சுமார் 20 அடியில் 2 பேர் மயங்கி கிடந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். மேலும், 60 அடியில் ஒருவரும், 80 அடியில் ஒருவரும் பிணமாக கிடந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இரவு 1 மணி அளவில் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
சுரங்கத்துக்குள் இறங்கிய மற்றொருவர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், அவருடைய உடல் 80 அடி வரையிலும் கிடைக்கவில்லை. இதனால் இன்னும் கீழே அவருடைய உடல் கிடக்கலாம் என தெரிகிறது. அவருடைய உடலை தேடும் பணி நடந்து வருகிறது. தங்கச்சுரங்கத்திற்குள் 1,000 அடி ஆழத்தில் இறங்கி, தங்கம் திருட முயன்றபோது அவர்கள் 3 பேரும் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி தவறி பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மயக்க நிலையில் உள்ள 2 பேரும், தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விரிவான விசாரணைக்கு உத்தரவு
இதுகுறித்து மாரிகுப்பம் போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் ஆண்டர்சன்பேட்டை லூர்து நகரை சேர்ந்த கந்தா (வயது 55), அவருடைய மகன் சந்தோஷ் என்கிற படையப்பா (20), சூசைப்பாளையாவை சேர்ந்த ஜோசப் (45) என்பதும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மஸ்கம் சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த விக்டர் (37), லூர்து நகரை சேர்ந்த கார்த்திக் (39) என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தங்கச்சுரங்கத்திற்குள் இறங்கி திருட திட்டம் தீட்டியது ரிச்சர்டு என்பதும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இறந்த 3 பேரின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தங்கச்சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த கந்தாவின் உடலை தீயணைப்பு படையினர் நேற்றும் தொடர்ந்து தேடினார்கள். ஆனாலும் அவருடைய உடல் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரிச்சர்டை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்., அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கச்சுரங்கத்திற்குள் திருட சென்றபோது ஆக்சிஜன் கிடைக்காமல் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தங்கவயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story