கொரோனா பரவல் இன்னும் சில மாதங்கள் தொடர்ந்து இருக்கும் - உலக சுகாதார நிறுவன மருத்துவ அலுவலர் பேட்டி


கொரோனா பரவல் இன்னும் சில மாதங்கள் தொடர்ந்து இருக்கும் - உலக சுகாதார நிறுவன மருத்துவ அலுவலர் பேட்டி
x
தினத்தந்தி 14 May 2020 11:56 PM GMT (Updated: 14 May 2020 11:56 PM GMT)

கொரோனா பரவல் இன்னும் சில மாதங்கள் தொடர்ந்து இருக்கும் என்று உலக சுகாதார நிறுவன மருத்துவ அலுவலர் சுரேந்திரன் கூறினார்.

ஆம்பூர், 

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மேற்கொண்டு வரும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைள், முன்னேற்பாடுகள், மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரன் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை உரிய முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், வாலாஜா ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் அரசு மருத்துவமனையில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கொரோனா தொற்று பரவல் இன்னும் சில மாதங்கள் தொடர்ந்து இருக்கும். அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கை கழுவுதல் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story