‘வேளாண்மை சந்தை சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்’ - கர்நாடக அரசுக்கு குமாரசாமி எச்சரிக்கை
வேளாண்மை சந்தை சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
“வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்தம் குறித்து அரசு முடிவு எடுக்க உள்ளது. விவசாயிகளின் வாழ்க்கையை நிச்சயமற்றதாக மாற்றி பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு அவசர சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்ட திருத்தத்தை எக்காரணம் கொண்டும் செயல்படுத்த கூடாது.
இது கர்நாடக அரசுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை. அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்துவோம். பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவது என்பது அபாயகரமானது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பலி கொடுப்பது நமது முதுகெலும்பை முறிப்பது போன்றது. பெரு நிறுவனங்களுக்காக விவசாயிகளின் நலனை விட்டுக்கொடுப்பது சரியா?.
பயனாளிகளுக்கு மகிழ்ச்சி
விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்கும்போது, ஏமாற்றப்பட்டால் அதுகுறித்து வேளாண்மை சந்தைகள் நிர்வாகத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் பெரு நிறுவனங்களுக்கு எதிராக போராடும் பலம் நமது விவசாயிகளுக்கு உள்ளதா? விவசாயத்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, குடகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்கினேன். தற்போது அங்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது பயனாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கும். அதே மகிழ்ச்சி எனக்கும் ஏற்பட்டுள்ளது. நாம் செய்யும் பணிகள் பேச வேண்டும்.”
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story