நாகை மாவட்டத்தில் முடிதிருத்தும் கடைகளை திறக்க நடவடிக்கை கலெக்டரிடம் மனு


நாகை மாவட்டத்தில் முடிதிருத்தும் கடைகளை திறக்க நடவடிக்கை கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 15 May 2020 5:58 AM IST (Updated: 15 May 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

நாகப்பட்டினம், 

முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் காளிமுத்து, நாகை நகர செயலாளர் வீரமணி ஆகியோர் தலைமையில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர். சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் பிரவீன்நாயரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைபிடித்து வருகிறோம். இதனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் உள்ள முடிதிருத்தும் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள எங்களின் வாழ்வாதாரம் முடங்கி போய் உள்ளது.

கடைகளுக்கு வாடகை கொடுக்க வேண்டும். குடியிருக்கும் வீடுகளுக்கு வாடகை கொடுக்க வேண்டும். இதுவரை எந்த ஒரு நிவாரணமும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே உரிய விதிமுறைகளுடன் முடிதிருத்தும் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story