சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா: 4 பேர் தங்கியிருந்த விடுதிக்கு வெளிநபர்கள் செல்ல தடை


சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா: 4 பேர் தங்கியிருந்த விடுதிக்கு வெளிநபர்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 15 May 2020 6:19 AM IST (Updated: 15 May 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா உள்ளது. கன்னியாகுமரியில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, 

சென்னையில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா உள்ளது. கன்னியாகுமரியில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

சென்னையில் வசித்து வரும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இவ்வாறு குமரி மாவட்டத்திற்கு வருகிறவர்களை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என்பது உறுதியான பின்புதான் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் நாகர்கோவில் அருகே உள்ள ஆளூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 45 வயது கணவர், 40 வயது மனைவி, 14 வயது, 12 வயது பிள்ளைகள் என 4 பேர் சென்னையில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் வந்த போது சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகளை சேகரித்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனைவரையும் கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்திருந்தனர். நேற்றுமுன்தினம் வெளியான பரிசோதனை முடிவில் அவர்கள் 4 பேருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார் கள்.

விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு

கன்னியாகுமரியில் 4 பேரும் தங்க வைக்கப்பட்ட விடுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தனிமைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக 4 பேரும் தங்கியிருந்த அறையை முற்றிலுமாக மூடி சீல் வைத்துள்ளனர். தற்போது, அந்த விடுதியில் மாலத்தீவில் இருந்து வந்த 32 பேர், கத்தார் நாட்டில் இருந்து வந்த 11 பேர் என மொத்தம் 43 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர் களின் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் வரும் வரை வெளியே செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை பேரூராட்சி பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்த நிலையில் வழங்கி வருகிறார்கள். விடுதியில் தங்கியுள்ள யாரும் வெளியே செல்லாதவாறும், வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லாதபடியும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு

தூய்மை பணியாளர்கள் விடுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விடுதியில் தங்க இருப்பவர்களுக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட பின்பு அனைவரும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்தநிலையில், நேற்று புதிதாக சென்னையில் இருந்து வந்த 38 பேர் மற்றொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது கன்னியாகுமரியில் பல்வேறு விடுதிகளில் மொத்தம் 343 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story