பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு: காசிக்கும், பெண் போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பா? சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு
பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பெண் போலீஸ் அதிகாரியுடன் தொடர்பு இருந்திருக்குமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
பெண் டாக்டர்
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் நட்பு ஏற்படுத்தி வந்தார். பின்னர் பெண்களிடம் நெருக்கமாக பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்து கொண்டார். அதன்பிறகு ஆபாச படங்களை காட்டி மிரட்டி பெண்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதே போல சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததுடன், அவரது புகைப்படங் களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பெண் டாக்டர் அளித்த புகாரின் பேரில் காசியை போலீசார் கைது செய்தனர்.
கந்து வட்டி
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் காசியால் ஏராளமான பெண்கள் பாதிக் கப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே காசி மீது நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு பெண் புகார் அளித்தார். மேலும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அதற்குப் பதிலாக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஏமாற்றி வாங்கியதாக டிராவிட் என்பவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதோடு சிறுமி உள்பட 3 பெண்கள் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் காசி மீது கந்துவட்டி வழக்கு உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையே அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வெளிநாட்டு நண்பர்
இதனையடுத்து காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து காசி பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங் களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், காசியின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நண்பர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் விமான போக்குவரத்து தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு தான் அவரை குமரி மாவட்டம் அழைத்து வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் தொப்பி
இந்த நிலையில் ஏற்கனவே காசி ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் தொப்பியை தன் தலையில் அணிந்தபடியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. இதனால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் ஒரு பெண் காசியின் அருகில் அமர்ந்திருப்பது போன்றும் இருந்தது.
இதை வைத்து பார்க்கும் போது காசியால் பாதிக்கப்பட்ட பெண்களில், யாராவது பெண் போலீஸ் அதிகாரியாக இருப்பாரோ? அல்லது போலீஸ் அதிகாரியின் மகளாக இருக்குமோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story