குமரி மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் 25 இடங்களில் ஆர்ப்பாட்டம்
கொரோனா பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி குமரி மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் 25 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
கொரோனா பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி குமரி மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் 25 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு.
சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில மைய கூட்டத்தில் 14-ந் தேதி(நேற்று) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதாவது கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மின்சார ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் தொலை தொடர்பு தொழிலாளர்கள் என எண்ணற்ற தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கிட வேண்டும், தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று சி.ஐ.டி.யு. சார்பில் சுமார் 25 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நாகர்கோவிலை பொருத்த வரை சி.ஐ.டி.யு. மாவட்ட அலுவலகம், கோட்டார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், வடசேரி மின்சார வாரிய அலுவலகம், வாத்தியார்விளை அங்கன்வாடி மையம், ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகிய இடங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது, கேரளாவை போல காப்பீடு உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஒப்பந்த தினக்கூலி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
கோஷம்
சி.ஐ.டி.யு. மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தங்கமோகனன் தலைமை தாங்கினார். மீன் சம்மேளன பொதுச்செயலாளர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோட்டார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரமசிவனும், மின்சார வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு குணசேகரனும், அங்கன்வாடி மையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு லட்சுமியும், ராணிதோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்டீபன் ஜெயக்குமாரும் தலைமை தாங்கினர். குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை செயலாளர் ரத்தினராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஜாண் பென்னி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அரசு அறிவுறுத்தியபடி சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
வழக்குப்பதிவு
ஊரடங்கு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்ட செயலாளர் தங்கமோகனன், அந்தோணி உள்பட 21 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுபோல், கோட்டார் போலீஸ் நிலையத்தில் பரமசிவம் உள்பட 8 பேர் மீதும், ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் ஸ்டீபன் ஜெயக்குமார் உள்பட 10 மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story