பொள்ளாச்சியில், ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் ஆய்வு


பொள்ளாச்சியில், ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 May 2020 3:45 AM IST (Updated: 15 May 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் உள்ள ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

பொள்ளாச்சி,

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவிட்டது.

மேலும் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை என்றும், பொருட்கள் முறையாக வினியோகம் செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் உள்ள ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் வைத்திநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் எடை குறித்து ஆய்வு செய்தார். மேலும் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது குடிமைப்பொருள் அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து குடிமைப் பொருள் அதிகாரிகள் கூறியதாவது:-

ஊரடங்கு காரணமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்தும், எடை குறித்தும் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார். ரேஷன் கடைக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லும் நபர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கூட்டம், கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடை ஊழியர்களும் முகக்கவசம், கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story