காரைக்குடியில், சீல் வைக்கப்பட்ட ரேஷன் கடைக்குள் நள்ளிரவில் புகுந்தவர் சிக்கினார்


காரைக்குடியில், சீல் வைக்கப்பட்ட ரேஷன் கடைக்குள் நள்ளிரவில் புகுந்தவர் சிக்கினார்
x
தினத்தந்தி 15 May 2020 3:45 AM IST (Updated: 15 May 2020 9:54 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் உள்ள சீல் வைக்கப்பட்ட ரேஷன் கடைக்குள் புகுந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காரைக்குடி, 

காரைக்குடி கீழத்தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. இதன்பேரில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து, காரைக்குடி தாசில்தார் பாலாஜி, காரைக்குடி குடிமைப்பொருள் தாசில்தார் அந்தோணி ராஜ் ஆகியோர் அந்த ரேஷன் கடையில் திடீர் சோதனை நடத்த சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அந்த கடையின் பொறுப்பாளர் பாலு, ரேஷன் கடையை பூட்டி விட்டு தலைமறைவானார். இதையடுத்து அவரை அதிகாரிகள் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைக்கு நேற்று முன்தினம் சீல் வைத்தனர். அதன் பின்னர் நள்ளிரவு நேரத்தில் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 42) சீல் வைக்கப்பட்ட ரேஷன் கடையின் பக்கவாட்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை அகற்றிவிட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் அவரை பிடித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அதிகாரிகள் அந்த கடையை திறந்து ஆய்வு நடத்தியபோது பொருட்களின் இருப்பு குறைவாக உள்ளது தெரியவந்தது. இதையடுத்து கடையின் பணியாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில், ஜெயகுமாரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story