ராஜபாளையம் பட்டாலியனில் புதிதாக பணியில் சேர்ந்த போலீஸ்காரருக்கு கொரோனா - விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 45-ஆக உயர்வு
ராஜபாளையம் பட்டாலியனில் புதிதாக பணியில் சேர்ந்த போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்,
தமிழகம் முழுவதும் சமீபத்தில் போலீஸ் வேலைக்கு தேர்வான 8,500-க்கும் மேற்பட்டோரை குறுகிய கால பயிற்சிக்கு பின் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பட்டாலியனில் உள்ள பயிற்சி மையத்தில் 440 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2-ந்தேதிதான் பணியில் சேர்ந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு பயிற்சியில் இருந்த 24 வயது போலீஸ்காரர் ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரி கிராமமாகும்.
இவருக்கு பயிற்சிக்கு வருவதற்கு முன்பே கொரோனா தொற்று ஏற்பட்டதா அல்லது பயிற்சிக்கு சேர்ந்த பின்பு பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து சுகாதார துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பாதிப்பு மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது. பிற பகுதிகளில் உள்ள போலீஸ் பயிற்சி மையங்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட பின்பு பயிற்சி மையங்களில் பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ராஜபாளையத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story