கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியது - அதிகாரிகள் தகவல்
கோவை மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் முதன்முதலில் கடந்த மார்ச் 19-ந்தேதி ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவை திரும்பிய எம்.பி.ஏ. மாணவிக்கு கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வெளிநாடு சென்று வந்தவர்கள் பட்டியல் பெறப்பட்டு அவர்களது வீடுகளில் ‘தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டவர் வீடு‘ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர், ஆனைமலை, பொள்ளாச்சியை சேர்ந்தவர்களுக்கு கொரோ னா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கொரோனாவுக்கான சிறப்பு ஆஸ்பத்திரியாக அறிவிக்கப்பட்டது. அங்கு கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்ததார். 145 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பினர். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியது. இதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு மண்டலங்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 11 நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி கூட கோவை மாவட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. இதேநிலை மேலும் 10 நாட்கள் நீடித்தால் கோவை மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறும்.
இந்த அளவுக்கு கோவை மாவட்டம் முன்னேற பொதுமக்கள் உள்பட அனைவரும் ஒத்துழைப்பு அளித்தனர். காவல்துறை, சுகாதாரத்துறை, தூய்மை பணிபிரிவு என்று அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தொற்று இல்லாத மாவட்டமாக மாறியதற்கு சாத்தியமானது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொற்று இல்லாத மாவட்டமாக மாற தீவிர முனைப்பு காண்பித்தார். அடிக்கடி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டார். மாவட்ட கலெக்டர் ராஜாமணியின் சிறப்பான நிர்வாகமும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேற்கண்ட தகவலை கோவை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story