பெண்களும் பாத்திரத்தில் அள்ளிச்செல்கின்றனர்: குளித்தலை பகுதியில் தொடரும் மணல் திருட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குளித்தலை பகுதியில் மணல் திருடப்படுவது தொடர்ந்து நடக்கிறது. பெண்களும் பாத்திரத்தில் மணல் அள்ளிச்செல்கின்றனர்.
குளித்தலை,
குளித்தலை பகுதியில் மணல் திருடப்படுவது தொடர்ந்து நடக்கிறது. பெண்களும் பாத்திரத்தில் மணல் அள்ளிச்செல்கின்றனர். எனவே மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல் திருட்டு
கரூர் மாவட்டம் மாயனூர் முதல் திருச்சி மாவட்ட பகுதி வரை காவிரி ஆற்றுப்பகுதிகளில் மணல் அள்ள நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குளித்தலையை சுற்றியுள்ள பகுதியான வதியம் முதல் குமாரமங்கலம் வரையுள்ள காவிரி ஆற்றுப்பகுதி மற்றும் வாய்க்கால்களில் இருந்து தினமும் சிலர் மணல் எடுத்து, அதை சாக்குகளில் கட்டி இருசக்கர வாகனங்களில் கடத்திச்சென்று கட்டிடம் கட்டுபவர்களுக்கு விற்று வந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், மர்மநபர்கள் லாரிகளில் மணல் கடத்த தொடங்கினர். மேலும் காவிரி ஆற்றங்கரை மற்றும் வாய்க்காலில் இருந்து பெண்கள் பலர் பெரிய பாத்திரத்தில் மணலை திருடிச்சென்று விற்று வந்தனர்.
நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையிலும், குளித்தலை பகுதியில் மணல் திருட்டு, கடத்தல் சகஜமாக நடைபெற்றது. மணல் திருட்டில் ஈடுபடுகிறோம் என்பது தெரிந்தும் பலர் இதை குடும்ப தொழில் போலவே மாற்றிக்கொண்டது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கட்டுமான பணிகளுக்கு...
மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் கடந்த ஆண்டு அந்தந்த வட்ட பகுதியில் வருவாய்த்துறை மூலம் குழுக்கள் அமைத்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அவர்களால் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட முடியவில்லை. இதற்கிடையே கட்டிடம் கட்டும் வீடு, கடை உரிமையாளர்கள் பலர், கட்டுமான பணி நடந்தால் போதும் என்ற மனநிலையில், திருட்டு மணலை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக குளித்தலையை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மணல் திருட்டு இல்லாமல் இருந்தது. தற்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் விலக்கு அளித்துள்ள காரணத்தால், குளித்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிக்கு தேவையான மணல் திருட்டும் தொடங்கிவிட்டது. பெண்கள் பெரிய பாத்திரத்தில் மணல் அள்ளிச்செல்வதை காண முடிகிறது. இருசக்கர வாகனங்களிலும் மணல் கடத்தப்படுகிறது.
ஆபத்தான சூழ்நிலை
மணல் திருட்டை தடுக்காவிட்டால் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து தவித்துவரும் பலரும் இந்த மணல் திருட்டில் ஈடுபடும் ஆபத்தான சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மணல் திருட்டை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story