ரேஷன் அரிசி கடத்தல்: பெண் ஊழியர் உள்பட 4 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்தல்: பெண் ஊழியர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 May 2020 11:20 AM IST (Updated: 15 May 2020 11:20 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அண்ணாநகர் முந்திரிதோப்பு பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய பெண் ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, 

கொரோனா தொற்றால் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ரேஷன் கடையில் வாங்கும் அரிசி, பருப்பு போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் மதுரை அண்ணாநகர் முந்திரிதோப்பு பகுதியில் உள்ள ஒரு ரேஷன்கடையில் கடந்த 12-ந்தேதி பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த ரேஷன் அரிசியை சிலர் வேன் மூலம் கடத்தினார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதைதொடர்ந்து மதுரை கூட்டுறவு பண்டகசாலை பதிவாளர், துணை பதிவாளர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதவிர உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு வந்து ரேஷன் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் விசாரித்தனர். அதில் கடை விற்பனையாளர் காந்திமதி, எடையாளர் கரும்பாலை விஜயா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்திய சக்கிமங்கலம் குட்டை கண்ணன்(வயது 41), காமராஜர்புரத்தை சேர்ந்த வேன் டிரைவர் விக்னேஷ்வரன் (22), சுமைதூக்கும் தொழிலாளி மணிகண்டன் (29) மற்றும் கடை எடையாளர் விஜயா (37) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள், வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கடை விற்பானையாளர் காந்திமதி, சுமைதூக்கும் தொழிலாளி வீரபாண்டியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story