அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல்: பெரம்பலூர் மாவட்ட செயலாளரின் உறவினர் உள்பட 10 பேர் மீது வழக்கு


அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல்: பெரம்பலூர் மாவட்ட செயலாளரின் உறவினர் உள்பட 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 May 2020 11:34 AM IST (Updated: 15 May 2020 11:34 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெய்க்குப்பையை சேர்ந்தவர் துரை (வயது 63).

வேப்பந்தட்டை, 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெய்க்குப்பையை சேர்ந்தவர் துரை (வயது 63). இவர் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். 

மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவரும், அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளருமான முத்துசாமி(60), வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவரும், மாவட்ட மீனவர் அணி செயலாளருமான முருகேசன்(50), சாத்தனவாடி ஊராட்சி கழக செயலாளர் தங்கராசு(60) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் நெய்க்குப்பையில் உள்ள துரையின் வயலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய நபர்களில் சிலர் ஆயுதங்களை கொண்டு, பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் துரை, முத்துசாமி, தங்கராசு ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். முருகேசன் மட்டும் தப்பி ஓடி விட்டார். 

அதன் பிறகு தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர். இது குறித்து தகவலறிந்து அங்கு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் ரத்த காயங்களுடன் கிடந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக துரை, முத்துசாமி, தங்கராசு ஆகியோர் வி.களத்தூர் போலீசாரிடம் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரனின் அக்காள் மகன் அரணாரையை சேர்ந்த கார்த்திக், அதே ஊரை சேர்ந்த முத்துக்குமார், வக்கீல் பாலமுருகன் உள்பட 10 பேர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் கொடுத்தனர். இதையடுத்து வி.களத்தூர் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தால் கட்சியினரிடையே கோஷ்டி மோதல் உருவாகியுள்ளதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.


Next Story