ஆண்டிப்பட்டி அருகே, தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு - உப்புத் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம்


ஆண்டிப்பட்டி அருகே, தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு - உப்புத் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம்
x
தினத்தந்தி 15 May 2020 7:41 AM GMT (Updated: 15 May 2020 7:41 AM GMT)

ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதால் மக்கள் உப்புத்தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே அனுப்பபட்டி ஊராட்சியில் மேக்கிழார்பட்டி அருகே பூத்தமேடு கிராமம் உள்ளது. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வைகை ஆறு வறண்டதால், இந்த கிராமத்திற்கு சரிவர தண்ணீர் வருவதில்லை.

தினமும் அரைமணிநேரம் மட்டுமே தண்ணீர் வருவதால் ஒரு குடும்பத்திற்கு ஒரு குடம் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குடிநீர் வினியோகம் செய்யும் போது, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. கிடைக்கும் ஒருகுடம் தண்ணீர் குடிப்பதற்கே போதுமானதாக இல்லை.

இதனால், மக்கள் உப்புத்தண்ணீரை ஒரு குடம் ரூ.2 என்று விலைக்கு வாங்கி சமையல் மற்றும் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். உப்புத்தண்ணீரும் போதுமான அளவில் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வினியோகம் செய்யும் நேரத்தை எதிர்பார்த்து குழாய்களுக்கு அருகில் மக்கள் காலிக்குடங்களுடன் காத்திருக்கின்றனர்.

எனவே, தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story