தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவருடன் தாயம் விளையாடியதால் தொற்று பரவியது
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தாயம் விளையாடியதால் மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 71 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 42 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 28 பேர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்தவர். அவருக்கு வயது 47 ஆகும். அவர் வசிக்கும் தெருவில் ஏற்கனவே 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 29 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் ஓடைப்பட்டியை சேர்ந்தவர்கள் 13 பேர். இந்த ஊரைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு அவர் தனது தெருவை சேர்ந்த சிலருடன் தாயம் விளையாடி பொழுதுபோக்கி உள்ளார். இதன் மூலம் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஓடைப்பட்டிக்கு வெளியூர் நபர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஊரை விட்டு வெளியே செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
Related Tags :
Next Story