தண்ணீரின் தரம் குறித்து கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
தண்ணீரின் தரம் குறித்து கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’ என வர்ணிக்கப்படும் கொடைக்கானல் நகரின் மத்தியில் நட்சத்திர ஏரி உள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஏரியில் குதூகலமாக படகு சவாரி செய்வார்கள். மேலும் நட்சத்திர ஏரியில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் வெள்ளிநீர் வீழ்ச்சியாக கொட்டுகிறது.
இந்தநிலையில் நட்சத்திர ஏரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி மேம்படுத்தப்பட்ட மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வக அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த இளநிலை சுற்றுச்சூழல் விஞ்ஞானி லட்சுமி தலைமையில் அதிகாரிகள் ஏரியில் ஆய்வு செய்தனர்.
நட்சத்திர ஏரியில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தண்ணீரில் மாசு ஏற்பட்டுள்ளதா?, தற்போதைய தன்மை குறித்தும் அறிவதற்காக ஏரியின் பல்வேறு பகுதிகளில் பாட்டில்களில் தண்ணீர் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தண்ணீர் மதுரையில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.
இதுதொடர்பான ஆய்வு முடிவுகள், சென்னை தலைமை மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என இளநிலை சுற்றுச்சூழல் விஞ்ஞானி தெரிவித்தார்.
Related Tags :
Next Story