வேலையிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு 15 இடங்களில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - 32 பேர் கைது
ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்,
ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் மாவட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமை தாங்கினார்.
அப்போது தொழிலாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தக்கூடாது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்பட அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மேட்டுப்பட்டியில் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுதவிர திண்டுக்கல் நாகல்நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் வெங்கிடுசாமி தலைமையிலும், நத்தம் சாலை பணிமனை முன்பு கிளை செயலாளர் அனந்தராமன் தலைமையிலும், பழனி சாலை பணிமனை முன்பு கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் பழனி, ஒட்டன்சத்திரம், குஜிலியம்பாறை உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 இடங்களில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story