இன்று முதல் செயல்பட உள்ள வணிக நிறுவனங்களுக்கான விதிமுறைகள் - கலெக்டர் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள 6 வகையான தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான விதிமுறைகளை கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர்,
நகர்ப்புறங்களில் உள்ள குளிரூட்டப்படாத தனி ஜவுளிக்கடைகள் அதிகபட்சமாக 20 பணியாளர்களுடன் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் அனுமதி பெற்று காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி முதல் திறக்கலாம், பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கடைகள் செயல்பட அனுமதி இல்லை. குளிரூட்டப்பட்ட ஜவுளிக்கடைகள், ஷோரூம்கள், மார்க்கெட் அமைப்புகளில் அமைந்திருக்கும் கடைகள், வணிக வளாகத்தில் உள்ள ஜவுளிக்கடைகள் செயல்பட அனுமதி இல்லை. நகர்ப்புறங்களில் உள்ள குளிரூட்டப்படாத தனி நகைக்கடைகள் அதிகபட்சம் 10 பணியாளர்களுடன் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் அனுமதி பெற்று காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கலாம். பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தனி நபர்கள், 10-க்கும் குறைவான பணியாளர்களை கொண்டு நடத்தப்படும் நகைக்கடைகள் தனி அனுமதி ஏதும் பெறாமல் செயல்படலாம். குளிரூட்டப்பட்ட நகைக்கடைகள் வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடைகள், செயல்பட அனுமதி இல்லை.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விசைத்தறிகூடங்கள் அதிகபட்சமாக 50 பணியாளர்களுடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரிடம் அனுமதி பெற்று செயல்படலாம். அதிகபட்சமாக 6 பேர் கொண்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட அனுமதி பெற வேண்டியதில்லை. நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நூற்பு ஆலைகள் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலைகள் மாவட்ட பொது மேலாளரிடம் அனுமதி பெற்று 50 பணியாளர்கள் அல்லது 50 சதவீத பணியாளர்கள் இதில் எது அதிகமோ அந்த அளவு பணியாளர்களை கொண்டு செயல்படலாம். பணியாளர்களுக்கும், பணியாளர் வாகனத்திற்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
கிராமப்பகுதிகளில் உள்ள சிறு, குறு பட்டாசு ஆலைகள் 50 பணியாளர்கள் அல்லது 50 சதவீத பணியாளர்கள் இதில் எது அதிகமோ அந்த அளவுடன் உரிய அனுமதி பெற்று உற்பத்தியை தொடங்கலாம். ஆலை பற்றிய முழு விவரங்களை சிவகாசியில் உள்ள தனி தாசில்தாரிடம் தெரிவித்து பணியை தொடங்க வேண்டும். பணியாளர்களுக்கும், வாகனங்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்கும் இந்த 6 வகையான தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும் செயல்பட அனுமதி இல்லை. வாகனங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் தொழிலாளர்களை அழைத்து வர வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்த கூடாது. உடல் நலக்குறைவானவர்களையும் பணியமர்த்த கூடாது. ஆலை வளாகங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துவதுடன் தொழிலாளர்கள் போதிய சமூக இடைவெளியுடன் இதர பாதுகாப்பு அம்சங்களுடன் பணியாற்ற வேண்டும். கடைகளின் நுழைவு பகுதியில் வாடிக்கையாளர்கள் கை கழுவுவதற்கான ஏற்பாடு செய்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும். அனைத்து பணியாளர்களும் முககவசம் அணிந்திருக்க வேண்டும். கடையின் வெளியே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடையில் கோடுகள் வரைந்திருக்க வேண்டும். இந்த விதிகள் மீறப்படும் நிலையில் கடையின் அனுமதி ரத்து செய்யப்பட்டு பூட்டப்படும். வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் ஒரு பகுதியில் கடைகள் அல்லது தொழில் நிறுவனங்கள் திறந்திருப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் என கருதப்பட்டால் அந்த கடைகள் மூடுவதற்கோ அல்லது திறந்திருக்கும் நேரத்தை மாற்றுவதற்கோ அல்லது தேவைப்படும் நடவடிக்கை எடுக்கவோ வட்டார அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. எனவே அனைத்து வணிக நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் விதிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story