மும்பையில் இருந்து வந்தவர்களை ஆழ்வார்குறிச்சியில் தனிமைப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
மும்பையில் இருந்து வந்தவர்களை ஆழ்வார்குறிச்சியில் தனிமைப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடையம்,
கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரத்தை சேர்ந்த 4 பேர் மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர். அவர்கள் பாப்பான்குளம் அருகே உள்ள மயிலப்புரம் சோதனை சாவடி பகுதியில் வந்தபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களை ஆழ்வார்குறிச்சி கல்லூரி விடுதியில் ஒரு நாள் மட்டும் தனிமைப்படுத்தி விட்டு, மறுநாள் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கலாம் என வருவாய் துறையினர் முடிவு செய்தனர்.
அதற்காக தென்காசி தாசில்தார் சண்முகம் ஆழ்வார்குறிச்சிக்கு சென்று கல்லூரி விடுதியை பார்வையிட்டார். இதற்கிடையே இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் வருவாய் ஆய்வாளர் மனோகர், கிராம நிர்வாக அலுவலர் டேனியல் ஆகியோரிடம், மும்பையில் இருந்து வந்தவர்களை ஆழ்வார்குறிச்சி பகுதிக்குள் கொண்டு வர கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மும்பையில் இருந்து வந்தவர்களை ஆழ்வார்குறிச்சி பகுதிக்கு அழைத்து வர மாட்டோம் என போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story