அரசு பஸ்களை கழுவி சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்: நாளை மறுநாள் இயக்க வாய்ப்பு


அரசு பஸ்களை கழுவி சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்: நாளை மறுநாள் இயக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 16 May 2020 4:15 AM IST (Updated: 16 May 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் நிறுத்தி வைத்துள்ள பஸ்களை கழுவி சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பஸ்கள் நாளை மறுநாள் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர், 

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பஸ்-ரெயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ரெயில், பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் வழக்கம் போல் சென்று வர பஸ், ரெயில் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.

ஊரடங்கு உத்தரவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) முடிவடைய உள்ளது. 4-வது ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். ஆனால் நாளைக்கு பிறகு தமிழகத்தில் பஸ்களை இயக்குவதற்கு போக்குவரத்து கழகங்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்களை இயக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஓட்டுனர், நடத்துனர்களுக்கு முககவசம், கையுறை மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட இருக்கிறது. பஸ் இயக்குவதற்கு முன்பு ஓட்டுனர், நடத்துனர் ஆகியோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும்.

பயணிகள் இருக்கையில் அமர இடைவெளி விட்டு கோடு குறிப்பிடப்பட உள்ளது. பஸ்சில் நின்று பயணம் செய்தால் போதிய இடைவெளி அவசியம். கட்டாயம் பஸ்சின் ஜன்னல் திறந்து இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் 3 மீட்டர் இடைவெளி விட்டு பஸ்களை நிறுத்த வேண்டும். பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்சில் பயணம் செய்ய வரும் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். முககவசம் அணியாதவர்களை பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது. பொதுமக்கள் வரிசையில் நின்று பஸ்சில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும். கூகுள் பே, இ-பே முறையில் பயண கட்டணம் செலுத்த வசதி செய்ய வேண்டும். அரசு பஸ்களை இயக்கும்போது மேற்கண்ட நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் திருப்பூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பூர், பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, பழனி ஆகிய ஊர்களில் மொத்தம் 8 பணிமனைகள் உள்ளன.

இந்த பணிமனைகளில் மொத்தம் 560 அரசு பஸ்கள் உள்ளன. இந்த பணிமனைகளில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்கள் அனைத்தும் நேற்று முதல் தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பஸ்கள் தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருப்பூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி அரசு பஸ்கள் கழுவி சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 25 நிபந்தனைகளுடன் 18-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அரசு பஸ்களை இயக்குவதற்கு தயாராக இருக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

பணிமனையில் இருந்து பஸ் புறப்பட்டு செல்லும்போதும், பணிமனைக்கு வரும்போதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். ஓட்டுனர், நடத்துனருக்கும் மருத்துவ பரிசோதனை, தன் சுத்தம் பேணுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் தெரிவித்துள்ளனர்” என்றனர்.

மேலும் இது தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதால் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story