கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரம்: தெருக்கள் மூடப்பட்டது


கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரம்: தெருக்கள் மூடப்பட்டது
x
தினத்தந்தி 16 May 2020 4:00 AM IST (Updated: 16 May 2020 2:32 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் மும்பையில் இருந்து ஊர் திரும்பி வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கீழ கள்ளிகுளத்துக்கு வந்த பெண் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள தெருக்கள் மூடப்பட்டது. அந்த பெண்ணின் வீட்டை சுற்றியுள்ள 5 தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தெருக்களில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

களக்காடு அருகே உள்ள கீழகள்ளிகுளம் கிராமத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கடந்த 13-ந் தேதி மும்பை தாராவியில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்கள் ஆவார்கள். இதையடுத்து 4 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் சுகாதார துறையினர் விசாரித்து வருகின்றனர். திருக்குறுங்குடி வட்டார மருத்துவ அதிகாரி பிரியதர்சினி தலைமையில் மருத்துவ துறையினர் அப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்குநேரி அருகே வாகைகுளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதேபோல் மானூர் அருகே உள்ள களக்குடி, எட்டான்குளம் பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மானூர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. இதேபோல் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மற்ற பகுதிகளிலும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

Next Story