விருத்தாசலத்தில் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மது விற்பனை


விருத்தாசலத்தில் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மது விற்பனை
x
தினத்தந்தி 15 May 2020 9:33 PM GMT (Updated: 15 May 2020 9:33 PM GMT)

டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீஸ் அறிவுறுத்தல்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் காவல் நிலையத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது இன்று(சனிக்கிழமை) திறக்கப்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான தடுப்பு கட்டைகள் அமைத்திருக்க வேண்டும். அனைத்து மதுபிரியர்களுக்கும் டோக்கன் பெற்று வந்த பிறகுதான் மதுபாட்டில்களை வினியோகம் செய்ய வேண்டும். டோக்கன் இல்லாமல் வினியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வரும் மதுபிரியர்களுக்கு மதுபாட்டில்களை வழங்க கூடாது. அனைத்து மதுபிரியர்களும் முககவசம் அணிந்து இருக்க வேண்டும். ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுவதாக இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். கடையின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அவ்வப்போது சானிடைசர் மற்றும் முழு பாதுகாப்பை பின்பற்ற வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தெரிவித்தார்.

Next Story