தொழிற்சாலை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது - ஊராட்சிமன்ற தலைவருக்கு வலைவீச்சு


தொழிற்சாலை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது - ஊராட்சிமன்ற தலைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 May 2020 10:45 PM GMT (Updated: 15 May 2020 9:52 PM GMT)

வெங்கல் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை காவலாளியை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 25 பேரை வலைவீசி தேடி வருகினறனர்.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள கீழானூர் ஊராட்சிமன்ற தலைவராக உஷா என்பவர் இருந்து வருகிறார். இவரது கணவர் பிரேம்குமார்(வயது 38). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அவரது சகோதரர் ஆனந்தன்(40) மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உஷா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு உத்தரவை மீறி, அங்குள்ள இரும்பு அறுக்கும் தொழிற்சாலையின் முன்பு ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள தொழிற்சாலை பணியில் இருந்த காவலாளி பழனி(50) என்பவர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரேம்குமாரின் தரப்பினர் காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஊராட்சி தலைவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நாச்சியப்பன் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் பிரேம்குமார், ஆனந்தன் மற்றும் ரோஸ் ஆகிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளைச்சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 25 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story