சோகத்திலும், மகிழ்ச்சியான சம்பவம்: கொரோனாவால், 2 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த பெண்


சோகத்திலும், மகிழ்ச்சியான சம்பவம்: கொரோனாவால், 2 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த பெண்
x
தினத்தந்தி 16 May 2020 3:58 AM IST (Updated: 16 May 2020 3:58 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் சோகமான நேரத்திலும் மகிழ்ச்சியான சம்பவமாக 2 குழந்தைகளின் தாய், 2 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

தஞ்சாவூர், 

கொரோனாவால் சோகமான நேரத்திலும் மகிழ்ச்சியான சம்பவமாக 2 குழந்தைகளின் தாய், 2 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இந்த தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களை கூட பார்க்க முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டனர். சிலர் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டனர்.

2 குழந்தைகளின் தாய்

இப்படி பல்வேறு சோகமான சம்பவங்கள் நடந்த நிலையில் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள களஞ்சேரி ஊராட்சி வெள்ளனூர் கீழத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி பெயர் சித்ரா தேவி(வயது 35). இவர்களுக்கு திருமணம் ஆகி 1 மகன், மகள் உள்ளனர். மகன் 8-ம் வகுப்பு படித்த போது சித்ராதேவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு கடைசியாக தஞ்சையில் சுற்றித்திரிந்துள்ளார். செந்தில்குமார் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தஞ்சை மாநகரில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோரை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பிடித்து தஞ்சை சரபோஜி கல்லூரியில் தங்க வைத்தனர்.

குணம் அடைந்தார்

தஞ்சை மாநகராட்சி மற்றும் ரினிவல் பவுண்டேசன் அமைப்பினர் 115 பேரை பிடித்து தங்க வைத்து பராமரித்து வருகின்றனர். இதில் சித்ரா தேவியும் ஒருவர். இவர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பராமரிப்பவர்களின் அனுசரணையாலும், அன்பான உபசரிப்பாலும், மனநல மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட ஆலோசனையாலும் சித்ராதேவி மனநல பாதிப்பில் இருந்து குணம் அடைந்தார்.

அதன் பின்னர் அவர் தனது கணவர் பெயர் மற்றும் குழந்தைகளின் பெயரை தெரிவித்து அவர்களுடன் செல்ல வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அவர் தெரிவித்த முகவரி சரியாக இருக்கிறதா? என அதிகாரிகள் சென்று பார்த்தபோது அது உறுதி செய்யப்பட்டது.

பாசப்போராட்டம்

இதையடுத்து தஞ்சை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், ரினிவல் பவுண்டேசன் அமைப்பை சேர்ந்த வீரமணி ஆகியோர் ஜீப்பில் சித்ரா தேவியை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றனர். அப்போது செந்தில்குமார் வீட்டில் இல்லை. அவர் வேலைக்கு சென்று விட்டது தெரிய வந்தது. அவரது இரு குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டு இருந்தன. 2 ஆண்டுகளாக காணாமல் போன தனது தாயார் திடீரென்று தங்கள் வீட்டு முன்பு வந்து நின்றதை பார்த்து தூரத்தில் நின்ற அவரது 2 குழந்தைகளும் முதலில் சந்தேகம் அடைந்து அவரது அருகில் வர தயங்கினர்.

பின்னர் ஒருவித தயக்கத்துடன் அவர்கள் சற்று தள்ளி வந்து பார்த்தபோது அங்கு நிற்பது காணாமல் போன தனது தாயார்தான் என்பதை உறுதி செய்து கொண்டதும் ஓடி வந்து கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர். சித்ராதேவியும் தனது குழந்தைகளை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அங்கு நடந்த இந்த பாசப்போராட்டம் அருகில் நின்றவர்களின் கண்களையும் கசிய வைத்தது.

கொரோனா சோகமான நேரத்திலும் இப்படி ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்ததை பார்த்த அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story