அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி: தஞ்சை கோட்டத்தில் 3,435 கணக்குகள் தொடக்கம்
தஞ்சை கோட்டத்தில் 3,435 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தஞ்சை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்,
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தபால் அலுவலகங்கள் மூலம் கொரோனா நிவாரண நிதி வழங்க தஞ்சை கோட்டத்தில் 3,435 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தஞ்சை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நிவாரண நிதி
தமிழக முதல்-அமைச்சர், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகள் மூலம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக தஞ்சை கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்கள் மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
எனவே தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பயனாளிகள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களுடைய ஆதார் அட்டை, தொழிலாளர் நலவாரிய பதிவு எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் பணம் ஏதும் செலுத்தாமல் வங்கி கணக்கை தொடங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3,435 கணக்குகள் தொடக்கம்
இவ்வாறு தொடங்கும் வங்கி கணக்கு விவரம் தொழிலாளர் நலவாரிய ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் கணக்கில் தமிழக அரசின் கொரோனா நிவாரண தொகை வரவு வைக்கப்படும். தஞ்சை கோட்டத்தில் நேற்று வரை(15-ந் தேதி) 3,435 பயனாளிகளுக்கு கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story