மத அறக்கட்டளைகளிடம் உள்ள தங்கத்தை கடனாக பெற்று பொருளாதாரத்தை மீட்க யோசனை கூறிய என்னை விமர்சிப்பதா? - பிரிதிவிராஜ் சவான் கண்டனம்
மத அறக்கட்டளைகளிடம் உள்ள தங்கத்தை கடனாக பெற்று பொருளாதாரத்தை மீட்க யோசனை கூறிய தன்னை விமர்சிப்பதா என பிரிதிவிராஜ் சவான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
கொரோனா ஊரடங்கால் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
இதற்கு நிதி திரட்டுவதற்கு நாட்டில் உள்ள மத அறக்கட்டளைகளிடம் உள்ள தங்கத்தை கடனாக வாங்கலாம் என காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தார்.
அவரது இந்த கருத்தை வலதுசாரி அமைப்புகள் கடுமையாக விமர்சித்தன. மதபிளவை உண்டாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டின.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-
பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகு, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 1998-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக, வங்கியில் தங்கத்தை வட்டிக்கு டெபாசிட் செய்யும் தங்க வைப்புதொகை திட்டத்தை அறிமுகம் செய்தார்.
20,547 கிலோ தங்கம்
2015-ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், அப்போதைய நிதி மந்திரி அருண் ஜெட்லியும் மாற்றியமைக்கப்பட்ட தங்க நாணய திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இந்த திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வரை 20 ஆயிரத்து 547 கிலோ தங்கம் திரட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை அறிமுகப்படுத்திய பிரதமர்கள் இருவரும் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள்.
2016-ம் ஆண்டு மே 6-ந் தேதி மக்களவையில் அளித்த பதிலின்படி, மராட்டியத்தை சேர்ந்த 2 கோவில்கள் உள்பட நாட்டின் 8 கோவில்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்களிடம் உள்ள தங்கத்தை டெபாசிட் செய்துள்ளன. திட்டத்தின் முதல் ஆண்டில் தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா, ஜம்மு-காஷ்மீரில் உள்ள 8 கோவில்கள் 11 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்கத்தை டெபாசிட் செய்தன. மதபிளவை ஏற்படுத்தியதாக என்னை குற்றம் சாட்டியவர்கள் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story