மணப்பாறை அருகே சோகம்: குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் பலி
மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
துவரங்குறிச்சி,
மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இரட்டை சகோதரிகள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரி ஒன்றியம் வேம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை, விவசாயி. இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள், இரண்டு மகள்கள். இதில் மகள்கள் ராமு பிரியா(வயது 9), லட்சுமி பிரியா (9) ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள். இருவரும் வெள்ளபிச்சம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நீரில் மூழ்கி பலி
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அந்த பகுதியில் உள்ள கும்படிக்குளத்தில் சகோதரிகள் இருவரும் துணி துவைத்து குளிக்கச்சென்றுள்ளனர். துணி துவைத்து முடித்துவிட்டு அவர்கள் தண்ணீரில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது இருவரும் நீரில் அடுத்தடுத்து மூழ்கினர். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.
இறப்பிலும் இணைந்த சகோதரிகள்
இதையடுத்து இருவரின் உடல்களையம் அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்றனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுமிகளின் உடல்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறப்பால் இரட்டையர்களாக இருந்த சகோதரிகள், இறப்பிலும் ஒன்றாகவே இணைந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story