வாங்கிச்செல்ல வியாபாரிகள் வராததால் மாம்பழங்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்


வாங்கிச்செல்ல வியாபாரிகள் வராததால் மாம்பழங்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 16 May 2020 6:59 AM IST (Updated: 16 May 2020 6:59 AM IST)
t-max-icont-min-icon

வாங்கிச்செல்ல வியாபாரிகள் வராததால் மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கரூர், 

வாங்கிச்செல்ல வியாபாரிகள் வராததால் மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அரசே மாம்பழங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாம்பழங்கள்

மாம்பழ உற்பத்தியில் ஆந்திரா, உத்தரபிரதேசம், மராட்டியம், பீகார், கர்நாடகாவிற்கு அடுத்த படியாக தமிழகம் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மாம்பழ உற்பத்தி இருக்கும். தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்களில் சுவையும், அதிக இனிப்பும் கொண்ட அல்போன்சா மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிருஷ்ணராயபுரம், கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் சுமார் 120 எக்டேர் பரப்பளவில் மாமரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதில் இமாம்பசந்த் மற்றும் பெங்களூரோ மாம்பழம் உள்பட பலவகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம்.

விவசாயிகள் தவிப்பு

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கில் விவசாய பணிகள் உள்ளிட்டவற்றுக்கு தளர்வுகள் செய்யப்பட்டாலும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை. மேலும் பெரும்பாலான பொதுமக்கள் வேலையின்றி, வருமானமற்ற நிலையில் உள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாம்பழ சீசன் தொடங்கிய நிலையில், மாம்பழங்களை விற்பனைக்காக வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால், பெரும்பாலான பகுதிகளில் மாம்பழங்களை வாங்கிச்செல்ல வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதையடுத்து மாம்பழங்கள் உள்ளூரிலேயே குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை

கரூரில் கடைகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்ட வரப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.300 வரை விற்கப்பட்ட அல்போன்சா மாம்பழம், தற்போது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரூ.60-க்கு விற்கப்பட்ட செந்தூரம் வகை மாம்பழம் ஒரு கிலோ ரூ.50-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட பங்கனப்பள்ளி மாம்பழம் ரூ.60-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட கிரேப் மாம்பழம் ரூ.50-க்கும், ரூ.45-க்கு விற்கப்பட்ட கல்லாப்பள்ளி மாம்பழம் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் மாம்பழத்தை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. இதனால் கர்நாடக விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கிறது. அதேபோல் தமிழக அரசும் மாம்பழங்களை கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story