கெலமங்கலம் பகுதியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி கால்நடைகளை மேய விடும் அவலம்


கெலமங்கலம் பகுதியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி கால்நடைகளை மேய விடும் அவலம்
x
தினத்தந்தி 16 May 2020 9:00 AM IST (Updated: 16 May 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் கெலமங்கலம் பகுதியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அவற்றை பறிக்காமல் விவசாயிகள் கால்நடைகளை மேய விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், மல்லேபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகமாக உள்ளனர். குளிர்ச்சியான இந்த பகுதிகளில் முட்டைகோஸ் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. 80 கிலோ எடை கொண்ட முட்டைகோஸ் ரூ.500 வரையில் விற்று வந்த நிலையில் விவசாயிகள் ஓரளவு லாபம் ஈட்டி வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால், சாகுபடி செய்த முட்டைகோஸ்களை சந்தைக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க முடியவில்லை. இதனால் பயிரிடப்பட்ட அனைத்து காய்கறிகளுமே உள்ளூர் சந்தைகளுக்கு வருவதால், காய்கறிகளின் விலைகள் சரிவடைந்துள்ளது. அந்த வகையில் முட்டைகோஸ் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

விவசாயிகள் வேதனை

முன்பு ரூ.500-க்கு விற்று வந்த ஒரு மூட்டை முட்டைகோஸ் தற்போது ரூ.160-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு போதிய லாபம் இல்லை. முட்டைகோசை செடிகளில் பறிக்க ஆகும் கூலி செலவு, போக்குவரத்து செலவு, சந்தைக்கு கொண்டு செல்லும் செலவுகளை பார்த்தால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறினார்கள்.

இதுகுறித்து கெலமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கெலமங்கலம் பகுதியில் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை அறுவடை செய்து உள்ளூர் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கால்நடைகளை மேய விடுகிறார்கள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை வெளிஇடங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதி இல்லை. இதனால் அவற்றை பறிக்காமல் பலர் தோட்டங்களிலேயே விட்டு வருகின்றனர். மேலும் பலர் கால்நடைகளை மேயவிட்டு வருகின்றனர். மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படும் முட்டைகோசுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story