கோவையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 1,464 பேர் பீகாருக்கு அனுப்பி வைப்பு
கோவையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் மூலம் 1,464 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவை,
கோவையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் மூலம் 1,464 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வட மாநில தொழிலாளர்கள்
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் கோவை மாநகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் தங்கியிருக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களை கோவையில் இருந்து சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
1,464 பேர் அனுப்பி வைப்பு
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர், கோவை மாநகர பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் தங்கி இருக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 1,464 பேர் வாகனங்கள் மூலம் நேற்று காலையில் கோவை ரெயில் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யும் கருவி மூலம் காய்ச்சல் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. பின்னர் ரெயில் நிலையத்தில் தயாராக நின்ற சிறப்பு ரெயிலில் அவர்கள் ஏற்றப்பட்டனர். காலை 9.30 மணிக்கு அந்த சிறப்பு ரெயில் பீகாருக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து கோவை மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தொடர்பு கொள்ளலாம்
கோவை மாவட்டத்தில் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மேகாலயா, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ஒடிசா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதி அடைந்து வருகிறார்கள்.
எனவே சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி இதுவரை 11 சிறப்பு ரெயில்கள் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் யாராவது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் உள்ளதா என்று கணக்கிடப்பட்டு வருகிறது. எனவே சொந்த ஊருக்கு செல்ல தயாராக உள்ள வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாராளமாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story