நீலகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல அனுமதி மறுப்பு: மாநில எல்லையில் குடும்பத்துடன் காத்திருந்த கர்ப்பிணி


நீலகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல அனுமதி மறுப்பு: மாநில எல்லையில் குடும்பத்துடன் காத்திருந்த கர்ப்பிணி
x
தினத்தந்தி 16 May 2020 10:16 AM IST (Updated: 16 May 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், மாநில எல்லையில் குடும்பத்துடன் கர்ப்பிணி ஒருவர் காத்து கிடந்தார்.

கூடலூர்,

நீலகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், மாநில எல்லையில் குடும்பத்துடன் கர்ப்பிணி ஒருவர் காத்து கிடந்தார்.

அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கு சென்று இருந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல மேட்டுப்பாளையம், திம்பம், சாம்ராஜ் நகர் வழியை பயன்படுத்த வேண்டும் என்றும், கர்நாடகாவில் இருந்து நீலகிரிக்கு செல்ல மைசூரு, குண்டல்பெட், கக்கநல்லா வழியை பயன்படுத்த வேண்டும் என்றும் அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது பலருக்கு தெரிவது இல்லை. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நீலகிரியில் இருந்து கக்கநல்லா வழியாக கர்நாடகாவுக்குள் செல்ல பலரும் முயல்கின்றனர். அப்போது அவர்களை கர்நாடக சுகாதார மற்றும் மருத்துவ துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர்.

மேலும் மேட்டுப்பாளையம், திம்பம், சாம்ராஜ் நகர் வழியாக வர அறிவுறுத்துகின்றனர். இதனால் அவர்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

காத்திருந்த கர்ப்பிணி

இந்த நிலையில் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் பெற்று, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கக்கநல்லா வழியாக கர்நாடகாவுக்குள் செல்ல முயன்ற கர்ப்பிணி ஒருவர் அம்மாநில அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் கர்நாடக அரசிடம் இ-பாஸ் பெற்று, சாம்ராஜ் நகர் வழியாக வரும்படி அறிவுறுத்தினர். இதனால் நீலகிரி-கர்நாடக எல்லையில் குடும்பத்துடன் கர்ப்பிணி காத்து கிடந்தார். இதுகுறித்து கர்நாடக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களது பரிந்துரையின்பேரில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குடும்பத்துடன் அந்த கர்ப்பிணி கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், கர்நாடக அரசின் உத்தரவு குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

Next Story