பலத்த காற்றுடன் கோடை மழை: ஆண்டிப்பட்டி தற்காலிக சந்தை உருக்குலைந்தது மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு
தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஆண்டிப்பட்டி தற்காலிக சந்தை உருக்குலைந்தது. மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தேனி,
தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஆண்டிப்பட்டி தற்காலிக சந்தை உருக்குலைந்தது. மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பலத்த காற்றுடன் மழை
தேனி மாவட்டத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் கார்மேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாலை 5 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. தேனி நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கம்பம் சாலையில் உள்ள வணிக வளாக கட்டிடங்களில் வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பேனர்கள் கிழிந்து பறந்தன. சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களும் தரையில் சாய்ந்தன.
பலத்த காற்றுக்கு தேனி என்.ஆர்.டி. நகரில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதுபோல், கருவேல்நாயக்கன்பட்டியிலும் பிரமாண்ட வாகை மரம் வேரோடு சாய்ந்து மதுரை சாலையில் விழுந்தது. தகவல் அறிந்ததும் தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தற்காலிக சந்தை
ஆண்டிப்பட்டி பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஆண்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாற்றப்பட்டு இருந்த காய்கறி மொத்த விற்பனை சந்தை உருக்குலைந்தது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த தகர கொட்டகைகள் அனைத்தும் பலத்த காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன. விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த காய்கறிகள் மழையில் நனைந்தன. சந்தை வளாகம் சேறும், சகதியுமாக மாறியதால் காய்கறிகள் சேற்றில் விழுந்து வீணாகின.
அதுபோல், கடமலைக்குண்டு, கண்டமனூர், சின்னமனூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த கோடை மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Related Tags :
Next Story