கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: வீரகேரளம்புதூர் தாலுகாவில் 3 நாட்கள் முழு ஊரடங்கு - அனைத்து கடைகளும் இன்று அடைப்பு
கொரோனா பரவலை தடுக்க வீரகேரளம்புதூர் தாலுகாவில் இன்று முதல் 3 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன.
சுரண்டை,
தென்காசி மாவட்டம் சுரண்டை சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்னையில் இருந்து சேர்ந்தமரம், பொய்கை மற்றும் ராஜகோபாலப்பேரி வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆலோசனைப்படி வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் ஹரிஹரன் தலைமை தாங்கினார்.
முழு ஊரடங்கு
இந்த கூட்டத்தில், சுரண்டை பகுதியில் கொரோனா சமூக தொற்று ஏற்படாமல் தடுக்க 17-ந் தேதி (இன்று) முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது என்றும், பால், மருந்தகம், ஆஸ்பத்திரிகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படுவது எனவும், சுரண்டை மற்றும் வீரகேரளம்புதூர் தாலுகா முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவது எனவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடைகளும் அடைப்பு
சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், டாக்டர் கீர்த்தீகா, சுரண்டை நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் கண்மணி மற்றும் அதிகாரிகளும், சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் நடராஜன், துணைத்தலைவர் சிவசக்தி முத்தையா, நிர்வாக குழு துரைமுருகன், செய்தி தொடர்பாளர் ராஜ்குமார், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஜேக்கப், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள் சேர்ம செல்வம், கணேசன், தெய்வேந்திரன், ஜவுளி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த பொன்ராஜ், ஜெபசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வீரகேரளம்புதூர் தாலுகாவில் உள்ள டாஸ்மாக் கடைகளும் 3 நாட்கள் அடைக்கப்படும். முழு ஊரடங்கிற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தாசில்தார் ஹரிஹரன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story