ஆவடி அருகே, நாய் கடித்து குதறியதில் சிறுவன் படுகாயம் - உச்சந்தலையில் சதை பிய்ந்து தொங்கியது


ஆவடி அருகே, நாய் கடித்து குதறியதில் சிறுவன் படுகாயம் - உச்சந்தலையில் சதை பிய்ந்து தொங்கியது
x
தினத்தந்தி 17 May 2020 4:15 AM IST (Updated: 17 May 2020 3:10 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே ஜெர்மன் நாய் கடித்து குதறியதில் சிறுவனின் உச்சந்தலையில் சதை பிய்ந்து படுகாயம் அடைந்தான்.

ஆவடி, 

ஆவடியை அடுத்த மோரை திருமலை நகரைச் சேர்ந்தவர் குமார்(வயது 47). கட்டிட ஒப்பந்ததாரர். இவரது வீட்டில் 2 ஜெர்மன் நாய்களை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கற்பகம் என்பவருடைய மகனான 3-ம் வகுப்பு மாணவன் விஷ்ணு (9) பக்கத்து வீட்டு சிறுமியுடன் கடைக்கு சென்றுவிட்டு குமார் வீட்டு வழியாக நடந்து வந்தான்.

அப்போது குமார் வீட்டின் வெளியே உள்ள கதவு திறந்து கிடந்தது. அதில் ஒரு ஜெர்மன் நாய் வெளியே ஓடி வந்தது. இதனால் பயந்துபோன விஷ்ணு அங்கிருந்து ஓடினான். அந்த ஜெர்மன் நாய் சிறுவனை விடாமல் துரத்திச்சென்று கவ்விப்பிடித்தது. பின்னர் விஷ்ணுவின் உச்சந்தலையை கவ்விப்பிடித்து தலை முடி களை கடித்து குதறியது. வலி தாங்க முடியாமல் விஷ்ணு அலறினான். வீட்டின் மாடி யில் இருந்து இதை பார்த்த குமாரின் மனைவி சித்ரா, ஓடிவந்து நாயிடம் இருந்து சிறுவனை மீட்க முயன்றார்.

ஆனால் நாய் சிறுவனை விடாமல் வாயால் அவனது உச்சந்தலையை முடியோடு சேர்த்து கவ்விப்பிடித்ததுடன், கால் நகத்தால் கீறிக்கொண்டே இருந்தது. அதற்குள் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், கம்பால் நாயை அடித்தனர். அதன்பிறகுதான் அந்த நாய் சிறுவனை விட்டது. சித்ரா தனது நாயை வீட்டுக்குள் இழுத்துச்சென்று கட்டிப்போட்டார்.

நாய் கடித்து குதறியதால் உச்சந்தலையில் ஒரு முடி கூட இல்லாமல் சதைகளோடு பிய்ந்து தொங்கியது. ரத்த வெள்ளத்தில் கதறி துடித்த சிறுவனை நாயின் உரிமையாளரான குமார், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் குழந்தைகள் சிறப்பு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை செய்தனர். பின்னர் வீட்டில் வளர்க்கும் நாயை முறையான பாதுகாப்பில்லாமல், அஜாக்கிரதையாக கையாண்டதாக நாயின் உரிமையாளரான குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story