மாமல்லபுரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சென்னை மது பிரியர்கள்


மாமல்லபுரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சென்னை மது பிரியர்கள்
x
தினத்தந்தி 17 May 2020 4:15 AM IST (Updated: 17 May 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் டாஸ் மாக் கடைகள் திறக்காததால் சென்னை மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மாமல்லபுரம்,

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

அப்போது சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. சென்னை மது பிரியர்கள் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திரண்டு வந்து திருப்போரூர், மாமல்லபுரம், வடநெம்மேலி, கொட்டமேடு, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் மதுவாங்கி சென்றதால் கூட்டம் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும் போலீசார் திணறினர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பகுதிகளில் கோர்ட்டு தடை நீக்கப்பட்ட நிலையில் நேற்று டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

சென்னை மது பிரியர்கள் வருகையை தடுக்கும் வகையில் நேற்று மாமல்லபுரம் காவல் உள் கோட்டத்தில் உள்ள 34 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

ஏமாற்றத்துடன் திரும்பினர்

இதை அறியாத சென்னை மது பிரியர்கள் பலர் நேற்று மாமல்லபுரம் நகர பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்றனர். டாஸ்மாக் கடைகள் திறக்காததால் வெகுநேரம் கடைகள் அருகில் காத்து கிடந்தனர்.

சிலர் எப்படியும் கடையை திறப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்து பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. பின்னர் சில மதுபிரியர்கள் மதுராந்தகம் சென்று மது வாங்கி செல்லலாம் என்ற ஆவலில் மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலை வழியாக சாரை, சாரையாக செல்ல முயன்றனர்.

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோடு இ.சி.ஆர். சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தி, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மீண்டும் சென்னைக்கே திருப்பி அனுப்பினர்.

தீவிர வாகன சோதனை

திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்ற வாகனங்களை உரிய அனுமதி அட்டை உள்ளதா? என பரிசோதனை செய்து அந்த வாகனங்களை மட்டுமே மதுராந்தகம் மற்றும் திண்டிவனம், புதுச்சேரி மரக் காணம் போன்ற பகுதிகளுக்கு செல்ல அனுமதித்தனர்.

அதேபோல் பழைய மாமல்லபுரம் சாலையிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு சென்னையில் இருந்து மது வாங்க இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மது பிரியர்கள் குறுக்கு வழிகளில் செல்லாத வகையில் இ.சி.ஆர். சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள அனைத்து இணைப்பு சாலைகளிலும் தடுப்புகள் வைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வண்டலூர், தாம்பரம், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 86 மதுக்கடைகள் உள்ளன. இதில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. 41 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.

Next Story