கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை காணப்படவில்லை - மாநில அரசு மீது பிரிதிவிராஜ் சவான் குற்றச்சாட்டு


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை காணப்படவில்லை - மாநில அரசு மீது பிரிதிவிராஜ் சவான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 May 2020 5:15 AM IST (Updated: 17 May 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை காணப்படவில்லை என்று மாநில அரசு மீது பிரிதிவிராஜ் சவான் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

மும்பை,

காங்கிரசை சேர்ந்த மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் அளித்த ஒரு பேட்டியில் தனது கட்சி அங்கம் வகிக்கும் மாநில அரசை பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாட்டிலேயே கொரோனா வைரசால் மராட்டியத்தில் தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மற்ற நகரங்களை விட இந்த நோய் பாதிப்பில் மும்பை முன்னணியில் உள்ளது. இந்த சூழலில் சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பணியில் இருக்கும் சில அதிகாரிகள் ஒரே நேரத்தில் 2 துறைகளை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. முதல்-மந்திரியின் முதல் வேலை நல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சரியான பதவிகளில் நியமிப்பதாகும்.

இவர்களை நியமனம் செய்யும் போது தகுதி பின்னணியை கருத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களின் நிபுணத்துவத்தை தற்போதய நேரத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

அரசியல் தலைமை இல்லை

எனவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடங்களை ஒரே நாளில் நிரப்ப வேண்டும். செயலாளர் நிலை அதிகாரிகள் தங்களது விருப்பப்படி செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே அரசியல் தலைமை உடனடியாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். இதற்காக நான் மாநில அரசை விமர்சிக்கிறேன் என்று எண்ணக்கூடாது. நான் சொல்வதை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனது கருத்து சொந்த அரசாங்கத்தை விமர்சிப்பதாக இருக்க கூடாது.

நிர்வாகத்தின் அனைத்து உரிமைகளும் மாவட்ட அளவில் கலெக்டர்களிடமும், தாலுகா அளவில் எஸ்.டி.ஓ.க்களிடம் உள்ளன. ஆனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை எங்கும் காணப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story