கோவை மாவட்டத்தில், விவசாயத்துக்கு தட்கல் முறையில் கூடுதல் மின்இணைப்பு - தலைமை பொறியாளர் தகவல்


கோவை மாவட்டத்தில், விவசாயத்துக்கு தட்கல் முறையில் கூடுதல் மின்இணைப்பு - தலைமை பொறியாளர் தகவல்
x
தினத்தந்தி 17 May 2020 4:00 AM IST (Updated: 17 May 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள விவசாய மோட்டார்களுக்கு கூடுதல் இணைப்பு தட்கல் முறையில் வழங்கப்படுவதாக தலைமை பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மண்டல மின்சார பகிர்மான தலைமை பொறியாளர் கே.அருள்மொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை,

கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 320 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பு பெற்றவர்கள் விவசாய மோட்டார்களை பயன்படுத்தி நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தி வருகிறார்கள். தற்போது மின்சார துறை புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.அதன்படி விவசாய மின் இணைப்பு பெற்று மோட்டார் பம்பு செட்டுகளை இயக்கி வருபவர்களுக்கு தட்கல் முறையில் அதே மின் இணைப்பில் கூடுதல் திறன் உள்ள மோட்டார் அதாவது அதிக திறனுள்ள எச்.பி. மோட்டார்களை பயன்படுத்திக் கொள்ள இணைப்பு வழங்கப்பட உள்ளது.

உதாரணத்துக்கு ஒரு விவசாயி ஏற்கனவே 10 எச்.பி. (ஹார்ஸ் பவர்) திறனுள்ள மோட்டார் பம்பு செட் வைத்திருப்பார். அவர் கூடுதலாக 5 எச்.பி. மோட்டார் பம்பு செட் வைத்துக்கொள்ள விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். அவருக்கு தட்கல் முறையில் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும். விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள பயனாளிகள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

விண்ணப்பம் கொடுத்தவுடன் அந்த பகுதிக்கு மின்சார வாரிய அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து அதற்கான வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் கூடுதல் திறனுள்ள மோட்டார் பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்பு வழங்கப்படும். இதற்கான ஒப்புதல் கடிதங்களை அந்தந்த செயற்பொறியாளர் அலுவலகத்தில் அடுத்த மாதம்(ஜூன்) 30-ந் தேதி வரை அளிக்கலாம்.

இதற்கான ஒருமுறை கட்டணம் ஒரு எச்.பி.க்கு ரூ.20 ஆயிரம் மட்டும் ஆகும். வேறு எந்த ஆவணமும் இணைக்க தேவையில்லை. பெயர் மாற்றம் இருந்தால், அதற்குண்டான ஆவணங்கள் மற்றும் உரிய கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story