நீலகிரி மாவட்டத்தில், கட்டுமான தொழிலில் ஈடுபடுத்தப்படும் கழுதைகள் - தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று ஏற்பாடு
ஊரடங்கால் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று ஏற்பாடாக நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலில் கழுதைகள் ஈடுபடுத்தப்படுகிறது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை, காய்கறி விவசாயம் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தவிர கட்டுமானம் மற்றும் சுற்றுலா தொழிலும் கூலித்தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உள்ளூர் தொழிலாளர்கள் தவிர வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் உள்ளனர்.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 1 மாதத்துக்கும் மேல் ஊரடங்குஅமலில் உள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி தவிக்கிறார்கள். மேலும் வேலை இழந்த ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் விவசாய பணிக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கட்டுமான பணியும் குறைந்த தொழிலாளர்களை கொண்டு எந்திரத்தின் உதவியுடன் நடைபெறுகிறது. இதனால் எந்திர பயன்பாடுகள் தவிர்க்க முடியாததாகி வருகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு தளர்வு அளித்தது. இதனால் படிப்படியாக கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் போதிய தொழிலாளர்கள் இல்லை. மஞ்சூர் அருகே எடக்காடு கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பாங்கான இடத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் பற்றாக்குறையால் சாலை பணிக்கு தேவையான தொழிலாளர்கள் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக லாரிகளில் கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள், சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்களை மலைப்பாங்கான மேடான இடத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் போனது. போதிய தொழிலாளர்கள் இல்லாததால் கட்டுமான பொருட்களை மேடான இடத்துக்கு விரைவாக கொண்டு செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் செலவினமும் குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்று பல்வேறு இடங்களில் தொழிலாளர் பற்றாக்குறையால் கட்டுமான தொழிலில் மாற்று ஏற்பாடாக கழுதைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story