கூடலூரில், ஊருக்குள் புகுந்த காட்டுயானை - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


கூடலூரில், ஊருக்குள் புகுந்த காட்டுயானை - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 17 May 2020 3:45 AM IST (Updated: 17 May 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டுயானையை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கூடலூர்,

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலில் காயத்துடன் 30 வயதான ஆண் காட்டுயானை ஒன்று, கடந்த சில மாதங்களாக சுற்றித்திரிந்தது. மேலும் விவசாய பயிர்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. அந்த காட்டுயானையை கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். மேலும் காலில் உள்ள காயத்துக்கு பழங்களில் மாத்திரை வைத்து வழங்கி சிகிச்சை அளித்தனர். இதன் மூலம் அந்த காட்டுயானையின் காயம் குணமடைந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் கூடலூர் தோட்டமூலா பகுதிக்குள் அந்த காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து அங்குள்ள சாலையில் திடீரென வேகமாக ஓடி வந்தது. அப்போது அங்கு நடமாடி கொண்டு இருந்த பொதுமக்கள், காட்டுயானையை கண்டதும் அலறியடித்து வீடுகளுக்குள் ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தினேஷ் என்பவரது காரை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது. அதில் கார் சேதம் அடைந்தது. உடனே பொதுமக்கள் திரண்டு வந்து கூச்சலிட்டு காட்டுயானையை விரட்டினர். இதனால் அங்கிருந்து வனப்பகுதிக்குள் காட்டுயானை சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் வந்து, பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது காட்டுயானை ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும், இல்லையென்றால் அதனை பிடித்து முதுமலை முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோன்று பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அத்திக்குன்னா அருகே உள்ள அத்திமாநகர் பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு காட்டுயானை ஒன்று புகுந்தது. பின்னர் செல்வமணி காமராஜ் என்பவரது வீட்டின் மேற்கூரை மற்றும் சுவரை இடித்தது. மேலும் ஜெயராஜ், தனக்கொடி, கரியன் ஆகியோரின் தோட்டத்தில் நின்றிருந்த வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டியடித்தனர்.

Next Story