கடலூரில் பரபரப்பு மதுபாட்டில்கள் வாங்க போலி டோக்கன் வினியோகம்? 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை


கடலூரில் பரபரப்பு மதுபாட்டில்கள் வாங்க போலி டோக்கன் வினியோகம்? 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 May 2020 7:26 AM IST (Updated: 17 May 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்க போலி டோக்கனை விற்பனை செய்ததாக 17 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர்,

ஊரடங்கு உத்தரவு நிலையிலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்திலும் 126 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, மது விற்பனை நடைபெற்றது. இதில் ஒரு கடைக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன் மட்டும் வினியோகம் செய்யப்பட்டு, விற்பனை மும்முரமாக நடந்தது.

இதன்படி கடலூர் பஸ் நிலையம் அருகில் ஒரே இடத்தில் 2 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதிலும் கடைக்கு 500 டோக்கன் வீதம் 1,000 டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. இது தவிர நாளை (அதாவது இன்று) மது வாங்குவதற்கும் ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்தனர்.

ரூ.200-க்கு விற்பனை

இதற்கிடையில் 500 டோக்கன்களுக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலர் டோக்கன்களுடன் வந்து மது வாங்கியதாக தெரிகிறது. இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வாங்கி பார்த்தனர். அப்போது அந்த டோக்கன் போலியானது போல் தெரிந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த டோக்கன்களுடன் நின்று கொண்டிருந்த 17 பேரை பிடித்து விசாரணைக்காக திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரித்த போது, வெளியே ஒரு நபர் டோக்கனை ரூ.200-க்கு விற்பனை செய்ததாகவும், அவரிடம் வாங்கியதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து டோக்கன் வினியோகம் செய்த நபர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். மேலும் மதுபாட்டில்கள் வாங்க போலி டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story