சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர் பகுதியில் கலெக்டர் ஆய்வு


சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர் பகுதியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2020 2:13 AM GMT (Updated: 17 May 2020 2:13 AM GMT)

சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர் பகுதியில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்.

சங்கராபுரம்,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளிமாநிலத்தில் வேலை பார்த்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 205 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கராபுரம் வந்தனர். அவர்கள் அங்குள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று கல்லூரிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்ட கலெக்டர், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். அப்போது அவருடன் தாசில்தார் நடராஜன், வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மூங்கில்துறைப்பட்டு

மராட்டியம் மாநிலத்தில் இருந்து மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சவேரியார்பாளையத்துக்கு வந்த 13 வயது சிறுமிக்கு கொரோனா நோய் தொற்று இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து சவேரியார்பாளையம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கிரண்குராலா, நேற்று சவேரியார் பாளையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களை தீவிரமாக கண்காணித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் மகேந்திரன், தாசில்தார் நடராஜன், கொரோனா வைரஸ் தடுப்பு அலுவலர் ராஜராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

திருக்கோவிலூர்

இதேபோல் கலெக்டர் கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் திருக்கோவிலூர் கடைத்தெரு, வடக்குதெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ உரிய வசதி ஏதும் இல்லாததை பார்த்த கலெக்டர், கடை உரிமையாளரை எச்சரித்தார். மேலும் அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்றும், பொதுமக்கள் கைகளை கழுவ தண்ணீர், திரவ சோப்பு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதா என்றும் தினசரி கண்காணிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி, துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், தாசில்தார் சிவசங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி, இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், செயல் அலுவலர் செல்லப்பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story