நெல்லை - தென்காசி மாவட்டங்களில் 157 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு டோக்கன் முறையில் மதுபாட்டில்கள் வினியோகம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 157 டாஸ்மாக் கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 157 டாஸ்மாக் கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.
டாஸ்மாக் கடைகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்த 7-ந் தேதி திறக்கப்பட்டன. 2 நாட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி அனைத்து கடைகளும் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டது. கதவை திறக்க முடியாத அளவுக்கு வெல்டிங் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட்டு விதித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறப்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டது. நேற்று முன்தினம் மாலையில் டாஸ்மாக் கடைகளுக்கு வைக்கப்பட்டு இருந்த சீல் மற்றும் வெல்டிங் அகற்றப்பட்டன.
மீண்டும் திறப்பு
மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 96 டாஸ்மாக் கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 69 மதுக்கடைகளும் உள்ளன. கொரோனா கட்டுப்பாடு பகுதியில் உள்ள கடைகளை திறக்கவில்லை.
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும், நடுக்கல்லூரில் உள்ள ஒரு கடையும் திறக்கவில்லை. அதேபோல் தென்காசி மாவட்டத்தில் சேர்ந்தமரத்தில் 3 கடைகளும், புளியங்குடியில் 2 கடைகளும் திறக்கப்படவில்லை. மொத்தம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 8 கடைகள் திறக்கப்படவில்லை.
டோக்கன் முறை
மீதமுள்ள 157 கடைகளில் காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கியது. கடைகளுக்கு முன்பு சவுக்கு கட்டையால் தடுப்புகள் கட்டப்பட்டு இருந்தது. 3 அடி சமூக இடைவெளியில் வட்டம் போடப்பட்டு இருந்தது. அந்த வட்டத்துக்குள் மதுபிரியர்கள் நின்று உற்சாகத்துடன் மதுபாட்டில் களை வாங்கிச் சென்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட வண்ண டோக்கன் முறையில் மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்பட்டது.
ஒரு சில கடைகளில் கூட்டம் இருந்தது. கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் குறைவாக இருந்தது. டாஸ்மாக் கடைக்கு வந்தவர்கள் வாசலில் வைக்கப்பட்டு இருந்த சோப்பு ஆயில் மூலம் கைகளை சுத்தம் செய்தனர். மாலை 5 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
தென்காசி
தென்காசி யானை பாலம் அருகில் உள்ள கடைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. வாழைக்குலை, வேப்பிலை ஆகியவையும் கட்டப்பட்டிருந்தது. காலையில் கடைக்கு வந்த ஊழியர்கள் தேங்காயில் சூடம் வைத்து காட்டி பின்னர் தேங்காயை கடை முன்பு உடைத்தனர். அதன் பிறகு கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.
தென்காசியில் உள்ள 6 கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. காலையில் மட்டும் இந்த கடைகளில் சுமாரான கூட்டம் இருந்தது. அதன் பிறகு கூட்டம் இல்லை. மது பிரியர்கள் எந்த நெரிசலும் இல்லாமல் சாதாரணமாக வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story