தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 174 டாஸ்மாக் கடைகள் திறப்பு சமூக இடைவெளியை கடைபிடிக்காத மது பிரியர்கள்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 174 டாஸ்மாக் கடைகள் திறப்பு சமூக இடைவெளியை கடைபிடிக்காத மது பிரியர்கள்
x
தினத்தந்தி 17 May 2020 8:48 AM IST (Updated: 17 May 2020 8:48 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 174 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மதுபிரியர்கள் வரிசையில் நின்று டோக்கன் பெற்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

தர்மபுரி,

தமிழகத்தில் கடந்த 7-ந்தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டன. இந்தநிலையில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 65 டாஸ்மாக் கடைகளில் நேற்று 55 கடைகள் திறக்கப்பட்டன. நகர்புற பகுதியில் உள்ள 9 மதுக்கடை, எல்லப்புடையாம்பட்டியில் உள்ள ஒரு மதுக்கடை ஆகியவை திறக்கப்படவில்லை. நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு நீண்ட வரிசைகளில் காத்திருந்த மது பிரியர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு கடைக்கும் மொத்தம் 500 டோக்கன்கள் மட்டும் வினியோகிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் மதுக்கடைகளை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கேசவன் நேரில் பார்வையிட்டு மது விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்தினார்.

மண்ணை வாரி தூற்றியதால் பரபரப்பு

காரிமங்கலம் பகுதியில் மொரப்பூர் சாலையில் அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதால் மதுபிரியர்கள் விற்பனையாளர் களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் வேறுவழியின்றி மது பானங்களை வாங்கிய மது பிரியர்களில் சிலர் கடை முன்பு மண்ணை வாரி தூற்றி சாபமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 119 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கின. கடைகளுக்கு வந்த மது பிரியர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டது. முக கவசம் அணிந்து வந்த நபர்களுக்கு மட்டும் மது வகைகள் கொடுக்கப்பட்டது. இதேபோல் ஓசூர் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

Next Story